உரக்கடையில் புகுந்து பணம் திருடியவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வாலிபரின் உருவம்

அந்தியூர் அருகே உரக்கடையில் புகுந்து பணம் திருடிய வாலிபரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2020-09-13 00:08 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள அத்தாணியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அந்தியூர்-அத்தாணி ரோட்டில் உள்ள கரட்டூரில் உரக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்து பார்த்தார்.

அப்போது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கீழே கொஞ்சம் திறந்த நிலையில் இருந்தது. இதனால் ஷட்டரை அவர் முழுவதுமாக திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது டிராயர் உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த பணத்தை காணவில்லை. மேலும் கடையின் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் டி.வி.ஆர். கருவியும் இல்லை. ஒயர் துண்டிக்கப்பட்டு இருந்தது.

கேமராவில் பதிவான மர்மநபர்

இதுகுறித்து போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் மகேந்திரன் கடையை திறப்பதற்காக நேற்று முன்தினம் காலை சென்று கொண்டிருந்தார். அப்போது கடை அருகே சில சிறுவர்கள் டி.வி.ஆர் கருவியை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த மகேந்திரன் அதை வாங்கி பார்த்தபோது அது தனது கடையில் உள்ள டி.வி.ஆர் கருவி என்பது தெரிய வந்தது.

உடனே அதை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்தார். அதில், சம்பவத்தன்று நள்ளிரவு மர்மநபர் ஒருவர் அவரது உரக்கடைக்குள் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அதன்பின்னர் என்ன நடந்தது? என்று பதிவாகவில்லை. அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மர்மநபர் கண்காணிப்பு கேமராவுக்கு செல்லும் ஒயரை துண்டித்து அதில் பொருத்தப்பட்ட கருவியை எடுத்துச்சென்று வெளியே வீசிவிட்டு சென்றுள்ளார். அதைத்தான் சிறுவர்கள் கையில் எடுத்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

வைரலாகி வருகிறது

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரின் உருவத்தை கடைக்காரர் வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், இவர் எனது உரக்கடைக்குள் புகுந்து பணத்தை திருடியுள்ளார். இவரை பார்த்தால் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்