பொங்கலூரில் பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி சிறுமி சாவு
பொங்கலூரில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி 9 வயது சிறுமி பலியானாள். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 40). இவருடைய மனைவி அபிராமி(35). இவர்களுக்கு சாருலதா(9) என்ற பெண் குழந்தை இருந்தது. இவள் பொங்கலூரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று சாருலதாவை காணவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் மகளை தேடி வந்தனர். அப்போது ஊரின் அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலின் கரையில் சாருலதாவின் செருப்பு கிடந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியை சேர்ந்தவர்களின் உதவியுடன் வாய்க்கால் பகுதியில் தேடினர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பொங்கலூர் வந்த பல்லடம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் வாய்க்கால் பகுதி முழுவதும் தேடினர். அப்போது நாராயணநாயக்கன்புதூர் செல்லும் வழியில் உள்ள இரும்பு பாலம் அருகே உடல் ஒன்று மிதந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அது காணாமல் போன சாருலதாவின் உடல் என்பது தெரியவந்தது.
உடனடியாக வாய்க்காலின் உள்ளே இறங்கி சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர். சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.