காங்கேயத்தில், தேங்காய் எண்ணெய் ஆலையில் தீ விபத்து - ரூ.10 லட்சம் பருப்பு எரிந்து சேதம்

காங்கேயம் அருகே தேங்காய் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்புகள் எரிந்து சேதமானது.

Update: 2020-09-12 06:30 GMT
காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ம.பொ.சி வீதியில் கணேசன் என்பருக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தேங்காய் பருப்பிலிருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு டின்களில் அடைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்த எண்ணெய் ஆலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த ஆலையில் தேங்காய் பருப்பு சூடுபடுத்தும் கலனில் அளவுக்கு அதிகமான சூடு ஏற்பட்டதன் காரணமாக புகை வந்தது. பின்னர் பெரும்புகை மண்டலமாக உருவாகி தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அங்கு வேலை செய்து வந்த சில தொழிலாளர்கள் வெளியே தப்பி ஓடி வந்து சத்தம் போட்டனர். இது குறித்து உடனடியாக காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து காங்கேயம் தீயணைப்பு வீரர்கள் 6 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆலையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முற்பட்டனர். சுமார் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஆலையில் உள்ளே தேங்காய் பருப்புகளில் இருந்து புகை வந்து கொண்டே இருந்தது. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சூடுபடுத்தும் கலன் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தேங்காய் பருப்புகள் வெளியே எடுத்து அதன் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இதனால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் சூடுபடுத்தும் கலனில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 140 மூட்டை தேங்காய் பருப்புகள் மற்றும் எந்திரங்கள் சேதமடைந்தன.

மேலும் செய்திகள்