கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்காவிட்டால் போராட்டம் - கலெக்டரிடம் மனு அளித்த பின், கதிர்ஆனந்த் எம்.பி. பேட்டி

‘கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்’ என்று கலெக்டரிடம் மனு அளித்த பின் கதிர்ஆனந்த் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2020-09-12 05:00 GMT
வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர்ஆனந்த் கலெக்டர் சண்முகசுந்தரத்தை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோர்தானா அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வரும் நிலையில், கடைமடை பகுதிகளுக்கு தங்குதடையின்றி தண்ணீர் செல்ல முடியாத வகையில் கால்வாய்கள் முட்புதர்களாக கிடக்கின்றன. மழைக்காலத்துக்கு முன்பே அரசு அவற்றை தூர்வார தவறிவிட்டது. உடனடியாக கால்வாய்களை தூர்வார வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அதிகளவில் உள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ளதால் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாகும். இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலேயே வலியுறுத்தியுள்ளேன். எனினும், அந்த பள்ளி அமைக்க தேவையான 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித்தர மாநில அரசு மெத்தனம் காட்டுகிறது. அவ்வாறு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் பட்சத்தில் உடனடியாக கேந்திரிய வித்யாலயா பள்ளி மட்டுமின்றி அதேவளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய யு.பி.எஸ்.சி. பயிற்சி மையம், நூலகம் அமைத்துத்தருவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் உறுதியளித்துள்ளது. எனவே, 10 ஏக்கர் நிலத்தை விரைவில் ஒதுக்கி தராவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளேன். நாடாளுமன்றக் கூட்டத்தில் இருந்து திரும்பி வருவதற்குள் 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்து தரப்படும் என கலெக்டர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், பொன்னையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்றும், சத்துவாச்சாரி -காங்கேயநல்லூர் இடையே தரைப்பாலம் கட்டவும் தி.மு.க. சார்பில் சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. வேலூர் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நிறைவு பெறுவதிலும் மிகவும் தாமதம் செய்யப்படுகிறது.

வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் மூடப்படாமல் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்