மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - பட்டிவீரன்பட்டி அருகே பரபரப்பு
பட்டிவீரன்பட்டி அருகே, வாய்க்கால் மூலம் குளங்களுக்கு வந்த தண்ணீரை தடுத்து நிறுத்தியதாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டிவீரன்பட்டி,
ஆத்தூர் அருகே பெரியார் நரசிங்கபுரம் ராஜ வாய்க்கால் உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் போது, ராஜ வாய்க்கால் வழியாக சித்தரேவு, செங்கட்டாம்பட்டி, சுந்தரராஜபுரம், சாலைப்புதூர், நல்லாம்பிள்ளை, சிங்காரகோட்டை மற்றும் செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து ஏற்படும். இதனால் ராஜ வாய்க்கால், இந்த கிராமங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
இந்தநிலையில் சித்தரேவு, சித்தையன்கோட்டை உள்ளிட்ட கிராம குளங்களுக்கு பாரம்பரியமாக வந்து கொண்டிருந்த ராஜ வாய்க்கால் தண்ணீரை மாவட்ட நிர்வாகம் மணல் மூட்டைகளை கொண்டு தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ராஜ வாய்க்கால் தண்ணீர் குடகனாற்றில் திருப்பிவிட்டதாகவும் தெரிகிறது. இதனால் சித்தரேவு, சித்தையன்கோட்டை உள்ளிட்ட கிராங் களை சேர்ந்த விவசாயிகள், ராஜ வாய்க்கால் தண்ணீரை அடைத்ததால் தங்களது ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் ராஜ வாய்க்காலில் இருந்து குளங்களுக்கு வழக்கம்போல் தண்ணீர் முறையாக வழங்கக்கோரியும், தண்ணீரை தடுத்து நிறுத்திய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று சித்தரேவு, செங்கட்டாம்பட்டி, சாலைப்புதூர், சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டினர். மேலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சித்தரேவு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் அந்த கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.