கொடைக்கானல் அருகே, சரக்கு வேன் கவிழ்ந்து 4 குழந்தைகள் உள்பட 19 பேர் படுகாயம்

கொடைக்கானல் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து 4 குழந்தைகள் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-09-11 22:15 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் கிராமத்தை சேர்ந்த 4 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 19 பேர் கூக்கால் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று சரக்கு வேனில் சென்றனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து மன்னவனூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். சரக்கு வேனை, மன்னவனூரை சேர்ந்த கண்ணன் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார்.

தண்ணிப்பாறை என்ற இடத்தின் அருகே அவர்கள் வந்தபோது, அங்குள்ள ஒரு வளைவில் சரக்கு வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் திடீரென்று சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், வேனில் வந்த 19 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். டிரைவர் கண்ணன் லேசான காயத்துடன் தப்பினார்.

இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், படுகாயம் அடைந்தவர்களில் நந்தகுமார் (7), ஹரிதரணி (4), வேலம்மாள் (56), மோகினி (24), மேனகா (28), நீலாவதி (35), சாந்தி (25) உள்பட 11 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்