மதிப்பிழப்பு செய்த பிரேசில் பணநோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கின - மதுரை பெண் உள்பட 7 பேர் கைது
மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிரேசில் பண நோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கின. இதனை இந்திய பணமாக மாற்ற முயன்ற மதுரை பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை ரெயில் நிலையம் ஆர்.எம்.எஸ்.ரோடு பகுதியில் உள்ள பஜார் பகுதியில் வெளிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக இந்திய பணமாக மாற்ற ஒரு கும்பல் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே அந்த கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பழனிக்குமார் உத்தரவிட்டார்.
அதன் பேரில் திலகர்திடல் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒரு கும்பலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கருணாமூர்த்தி(வயது 35), புதுக்கோட்டை மாவட்டம் ராஜேந்திரன்(43), சிவகங்கை திருமாவளவன்(61), திருப்பூர் ராமர்(64), உதயகுமார்(32), மதுரை மாவட்டம் பேரையூர் தர்மராஜ்(45), மதுரை சொக்கலிங்க நகர் மகாலட்சுமி(31) என்பது தெரியவந்தது.
மேலும் கருணாமூர்த்தியிடம் பிரேசில் நாட்டை சேர்ந்த கத்தை, கத்தையாக மொத்தம் 385 பணநோட்டுகள் இருந்தன. அதை தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, வேதாரண்யத்தை சேர்ந்த சலாவுதீன் என்பவர் பிரேசில் நாட்டில் பணம் மதிப்பிழப்பு செய்த செல்லாத நோட்டுகளை நண்பர் கருணாமூர்த்தியிடம் கொடுத்துள்ளார். அதனை, இந்திய பணமாக மாற்றி நீயே வைத்துக்கொள் என்று கூறியுள்ளார்.
அந்த பணத்தை கருணாமூர்த்தி தனது நண்பர்கள் ராஜேந்திரன், திருமாவளவன், ராமர், உதயகுமார் மூலம் மாற்ற முயன்ற போது அவர்களால் முடியவில்லை. முடிவில் மதுரையை சேர்ந்த தர்மராஜ், மகாலட்சுமி மூலம் அந்த நோட்டுகளை மாற்ற பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சந்தித்தது தெரியவந்தது.
பணம் மதிப்பிழப்பு செய்த பிரேசில் நாட்டு நோட்டுகளின் இந்திய மதிப்பு சுமார் ரூ.53 லட்சம் ஆகும். பின்னர் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி உள்பட 7 பேரையும் கைது செய்தனர். அந்த பண நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.