அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு: பட்டா மாறுதலுக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம்; நில அளவையர் உள்பட 2 பேர் கைது

பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கிய நில அளவையர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-09-11 22:15 GMT
அருப்புக்கோட்டை, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியை சேர்ந்தவர் சின்னமுத்து (வயது 42). இவருக்கு அருப்புக்கோட்டை வெள்ளை கோட்டை பகுதியில் 9 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் பட்டா மாறுதலுக்காக அருப்புக்கோட்டை நகராட்சி நில அளவையர் சிவசங்கரனை அணுகியுள்ளார்.

அப்போது அவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னமுத்து, இதுகுறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் சின்னமுத்துவிடம் ரூ.12 ஆயிரத்தை கொடுத்து சிவசங்கரனிடம் கொடுக்கும்படி கூறினர்.

இதையடுத்து சின்னமுத்து பணத்தை பெற்று கொண்டு சிவசங்கரனிடம் கொடுப்பதற்காக சென்றார். அப்போது அவர் பணத்தை அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில், உதவியாளர் சூரியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து பணத்தை நேற்று மாலை சூரியிடம் கொடுத்தார். அவர் பணத்தை வாங்க முயன்ற போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நில அளவையர் சிவசங்கரன், அலுவலக உதவியாளர் சூரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்