கெங்கவல்லி அருகே, கார் மோதி பள்ளி மாணவர் பலி
கெங்கவல்லி அருகே கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பலியானார்.
கெங்கவல்லி,
பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அரசு. இவரது மகன் திருவேஷ் (வயது 18). 12-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் நேற்று திருவேஷ், பிரகாஷ் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கு சுற்றிப்பார்த்து விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது திருவேஷ், பிரகாஷ் வந்த மோட்டார் சைக்கிள் கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென்று, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டத்தில் படுகாயம் அடைந்த திருவேஷ், பிரகாஷ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருவேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.