மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரி பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு முற்றுகை, மறியல் போராட்டம்

மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரி பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு முற்றுகை, மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-09-11 22:15 GMT
பொன்மலைப்பட்டி, 

திருச்சி பொன்மலை பணிமனையில் 531 பேர் பணியமர்த்தப்பட்டதில் 500-க்கும் மேற்பட்டோர் வடமாநிலத்தவர்கள் ஆவார்கள். இதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசு பணிகளில் மத்திய அரசு பணிகளில் 90 சதவீதமும், மாநில பணிகளில் 100 சதவீதம் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். மேலும் மற்ற மாநிலங்களை பின்பற்றி தமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்தும் தமிழருக்கு முன்னுரிமை என்பதனை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு நேற்று முதல் ஒரு வார காலம் மறியல் போராட்டம் நடத்த அந்த அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் அழைப்பு விடுத்து இருந்தார்.

அதன்படி நேற்று காலை தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மாநகர செயலாளர் இலக்குவன் தலைமையில் பல்வேறு தமிழ் உணர்வாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ரெயில்வே பணிமனையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிமனை முன்பு எவ்வித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்