ஊட்டி அரசு விடுதியில், மாணவர்களின் கல்வி சான்றிதழ்கள் திருட்டு - விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

ஊட்டி அரசு விடுதியில் மாணவர்களின் கல்வி சான்றிதழ்கள் திருட்டு போனது. இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2020-09-11 06:30 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊட்டி சேரிங்கிராசில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஆனால் அந்த விடுதி மையமாக மாற்றப்படவில்லை.

இதற்கிடையே விடுதியில் பிற மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்கி, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர். மாணவர்கள் சிலரின் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அசல் சான்றிதழ்கள், மடிக்கணினிகள் திருட்டு போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முதுநிலை மாணவர்கள் 2 பேர், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறோம். கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவால் உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற விடுதி காப்பாளர் அறிவுறுத்தினார். இதனால் வெளி மாவட்டங்களை சேர்ந்த நாங்கள் அவசர அவசரமாக எங்களது உடைமைகள், பொருட்கள், மடிக்கணினிகளை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி விட்டு சென்றோம். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு தொடர்வதால் நாங்கள் வீடுகளிலேயே முடங்கினோம். தற்போது ஆன்லைன் வகுப்புக்காகவும், ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கவும் எங்களது உடைமைகள் மற்றும் மடிக்கணினிகளை எடுத்து செல்ல அரசு பஸ்கள் மூலம் ஊட்டிக்கு வந்தோம். விடுதியில் உள்ள நாங்கள் தங்கிய அறைக்கு சென்று பார்க்கும்போது இரும்பு பெட்டிகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையிலேயும், மடிக்கணினிகள் இல்லாமலும் இருந்தது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பி.எஸ்.சி. அசல் சான்றிதழ்கள் திருட்டு போனது.

இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டபோது, இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருப்பூர், தேனி மாவட்டத்தில் இருந்து வந்த நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். தற்போது இறுதியாண்டு செல்வதால் ஆன்லைன் வகுப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மடிக்கணினி அவசியம். எங்களது குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளதால் இந்த சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். எனவே திருட்டு போன மடிக்கணினிகள் மற்றும் அசல் சான்றிதழ்களை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்