மூங்கில்துறைப்பட்டு அருகே, சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளது பழையூர் கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பழையூர் கிராமம் வழியாக, தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சாலை குண்டும், குழியுமாக மாறி பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறியது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இந்த சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் அந்த வழியாக சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.