பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி - 12 பேர் கைது
பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறை சேர்வாய் பட்டு பகுதியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தேவராஜ் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு 10 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். தும்பல் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் மத்திய அரசு பணியில் உள்ளதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி அந்த நிலத்தை தேவராஜிக்கு விற்பனை செய்ய புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.
அப்போது அதற்கான கமிஷன் தொகை முழுவதையும் தேவராஜிடம், சசிகுமார் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த கடந்த மாதம் 6-ந்தேதி சசிகுமார், தேவராஜை தாக்கிவிட்டு அந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக தேவராஜ் கடந்த 8-ந் தேதி நேரில் சென்று சசிகுமாரிடம், நிலத்தை அபகரித்தது தொடர்பாக தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவரை தாக்கி, அடியாட்களை கொண்டு மிரட்டி உள்ளார்.
தனது நிலத்தை அபகரிக்க முயல்வதை அறிந்த தேவராஜ் கருமந்துறை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவின் பேரில் வாழப்பாடி துணை சூப்பிரண்டு வேலுமணி மேற்பார்வையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த விஜய கணேஷ் (வயது 30), சேலத்தைச் சேர்ந்த ரஞ்சித் (35), ஸ்ரீதர், அரவிந்தன் (25), கொடியரசு (35), பூபதி (30), மோகன் குமார்(40), மோகன் (25), மணிகண்டன் (32), விஜயகுமார் (37), சக்திவேல் (26) உள்பட 12 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறிய தும்பல் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் ஜோசப், ஜெயராமன், மாதேஷ், ராஜேந்திரன், சேகர், ரங்கசாமி, சீனு ஆகிய 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சசிகுமார் மீது நாமக்கல், ஏத்தாப்பூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.