ஓசூரில் பட்டப்பகலில், வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 8¼ பவுன் நகை கொள்ளை - பெண் உள்பட 6 பேர் கைது
ஓசூரில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பெண், 2 சிறுவர்களை கத்தியை காட்டி மிரட்டி 8¼ பவுன் நகையை கொள்ளையடித்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பகுதி வேலு நகரில் வசித்து வருபவர் பார்த்திபன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சர்மிளா. இந்த நிலையில், கடந்த 2-ந் தேதியன்று 3.30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பூமிகா (வயது 21) என்ற பெண், கிழிந்த துணிகளை தைத்து தருவதாக சர்மிளாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.
இதையடுத்து திடீரென 5 பேர் திபுதிபுவென புகுந்து சர்மிளா மற்றும் அவரது மகன்களை கத்தியை காட்டி மிரட்டி, சர்மிளா அணிந்திருந்த தாலி செயின், 2 தோடுகள், மோதிரங்கள் உள்ளிட்ட 8¼ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்று விட்டனர். இது சம்பந்தமாக ஓசூர் சிப்காட் போலீசில் சர்மிளா குடும்பத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கொள்ளைக்கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி பூமிகா மற்றும் பிரசாந்த் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று பெங்களூரு அருகே பொம்மசந்திரதின்னே பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (25), ஒசதுர்கா பகுதியை சேர்ந்த புட்டராஜூ (25), அதே பகுதியை சேர்ந்த கிரண் (25) மற்றும் சிக்காரிபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (23) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர், மேலும், அவர்களிடமிருந்து 8¼ பவுன் நகைகளும், 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.