சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக புகார்: கைதான நடிகைகளுக்கு நெருக்கடி முற்றுகிறது அமலாக்கத்துறையினர் விசாரிக்க முடிவு

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் நெருக்கடி முற்றியுள்ளதால் அந்த நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.

Update: 2020-09-10 20:45 GMT
பெங்களூரு,

கன்னட திரை உலகில் போதை பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் போதை பொருள் பயன்படுத்தியது மற்றும் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதியின் நண்பர் ரவிசங்கர், சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதை பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த வீரேன் கண்ணா, லோயம் பெப்பர் சம்பா, நயாஜ், பிரித்வி ஷெட்டி உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் போதை பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் சித்தாப்புராவில் உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் வைத்து ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் இன்ஸ்பெக்டர்கள் அஞ்சுமாலா, கார்த்திகாயினி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது போதை பொருள் விற்பனை கும்பலுடன் நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரங்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் போதை பொருள் விவகாரத்தில் பெங்களூருவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 24 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் நடிகைகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருந்தனர். மேலும் ராகிணி திவேதியிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தி சில முக்கிய தகவல்களை பெற்றுக்கொண்டனர்.

அமலாக்கத்துறையினர் விசாரணை

இதற்கிடையே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, ரவிசங்கர், வீரேன் கண்ணா ஆகியோர் சட்டவிரோதமாக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தன. அதாவது நடிகை சஞ்சனா கல்ராணி கடந்த ஒரு ஆண்டாக சரியாக படம் எதுவும் நடிக்கவில்லை. ஆனாலும் அவரிடம் சொகுசு கார்கள், அதிகளவில் பணம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோல ராகிணி திவேதியும் சட்டவிரோதமாக சொத்து குவித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் வெளியாகி வந்தது.

மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீரேன் கண்ணா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையின் போது வெளிநாட்டு பணமும் சிக்கி இருந்தது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு, பெங்களூரு அமலாக்கத்துறையினர் சென்றனர். அங்கு உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசிய அமலாக்கத்துறையினர் வீரேன் கண்ணா, நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோரின் சொத்து விவரங்கள் பற்றி விசாரித்து தகவல்களை கேட்டு அறிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நெருக்கடி முற்றுகிறது

இந்த நிலையில் ராகிணி திவேதியின் நண்பரான ரவிசங்கர் ஜெயநகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்தார். அவருக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் ராகிணி திவேதிக்கு ரூ.1 லட்சம் வரை செலவழித்து வந்து உள்ளார். மேலும் ரவிசங்கரும், ராகிணி திவேதியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரவிசங்கருக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது? அவருக்கும் போதை பொருள் விற்பனை கும்பலுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்தும் அமலாக்கத்துறையினர் விவரம் கேட்டு பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல சஞ்சனா கல்ராணி இலங்கைக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அங்கு அவருக்கு சிலரது தொடர்பு கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த விசாரணையின் போது நடிகைகள் சட்டவிரோதமாக பணம் சேர்த்தது தொடர்பாக அமலாக்கத்துறையினருக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாகவும், அவர்கள் சட்டவிரோதமாக பணம் சேர்த்தது உறுதியானால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணிக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜாமீன் கிடைக்காத வகையில்....

அதே நேரத்தில் ராகிணி திவேதியின் செல்போனில் இருந்து சில முக்கிய ஆதாரங்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்து உள்ளது. நேற்று சஞ்சனா கல்ராணியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதன்மூலமும் போலீசாருக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ராகிணி திவேதியும், ரவிசங்கரும் சேர்ந்து பெப்பர் சம்பாவிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசியது தொடர்பான தகவல்களும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. தற்போது நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதில் ராகிணி திவேதியின் போலீஸ் காவல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெற உள்ளது. இதற்கிடையே ராகிணி திவேதி தனக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தாலும், அவருக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் சாட்சி, ஆதாரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திரட்டி வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்