கொரோனா பரவலால் மூடல்: பள்ளிகளை எப்போது திறப்பீர்கள்? மந்திரியிடம் கேள்வி கேட்ட சிறுமி

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை எப்போது திறப்பீர்கள்? என்று மந்திரி சுரேஷ்குமாரிடம் சிறுமி கேள்வி கேட்ட ருசிகர சம்பவம் தார்வாரில் நடந்துள்ளது.

Update: 2020-09-10 20:29 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அனேகமாக கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற 21-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக பள்ளிக்கல்வித் துறை மந்திரியாக இருப்பவர் சுரேஷ்குமார். இவர் நேற்று தார்வார் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் தார்வார் டவுன் நிசர்கா லே-அவுட் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர், சிறுமிகளை பார்த்த, மந்திரி சுரேஷ்குமார், காரை நிறுத்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.

மந்திரியிடம் சிறுமி கேள்வி

அப்போது ஷ்ரத்தா என்ற சிறுமி, கர்நாடகத்தில் இன்னும் ஏன் பள்ளியை திறக்கவில்லை. எப்போது பள்ளியை திறப்பீர்கள் என்று மந்திரியிடம் கேள்வி எழுப்பினாள்.

இதை கேட்டு மந்திரி சிரித்தபடி, பள்ளியை திறப்பது எங்கள் கையில் இல்லை. பள்ளி எப்போது திறக்கப்படும் என்பதை கொரோனாவிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. எனவே வீட்டில் இருந்தபடி கல்வி பயிலுங்கள். தற்போது கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுங்கள் என்றார்.

நண்பர்களை பார்க்க...

அப்போது பிரஜ்வல் என்ற சிறுவனிடம் பள்ளி ஏன் திறக்க வேண்டும் என்று மந்திரி கேள்வி கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன் வீட்டில் தனியாக இருந்து ஆன்-லைனில் கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளி திறந்தால் தான் நண்பர்களை பார்க்க முடியும் என்றான்.

இதை கேட்டு புன்னகைத்த மந்திரி சுரேஷ்குமார் தலையை அசைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்