அகஸ்தீஸ்வரம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் - யூனியன் கூட்டத்தில் தலைவர் எச்சரிக்கை
அகஸ்தீஸ்வரம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என யூனியன் கூட்டத்தில் தலைவர் அழகேசன் தெரிவித்துள்ளார்.;
கன்னியாகுமரி,
அகஸ்தீஸ்வரம் யூனியன் 6-வது கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு யூனியன் தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முக வடிவு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெர்பெக்சுவல் ரோசிட்டா, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால் தங்கம், ஒன்றிய பொறியாளர்கள் கவிதா, கீதா, பணி மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி, அலுவலக மேலாளர் பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. இதில் கவுன்சிலர் பிரேமலதா (தி.மு.க.) பேசுகையில், ஐஸ் தொழிற்சாலைகளின் லைசென்ஸ் உரிமம் பெறுவதற்கான தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்றார். அதேபோல கவுன்சிலர் ஆரோக்கியசவுமியா (தி.மு.க.) பேசுகையில், ஐஸ் தொழிற்சாலைகளுக்கு முதலில் ரூ.2ஆயிரத்து 500 தான் லைசென்ஸ் கட்டணமாக பெறப்பட்டது. அது இப்போது தான் ரூ.25 ஆயிரமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறைந்த கட்டணம் தான். கோடிக்கணக்கில் முதலீடு செய்து தொழிற்சாலைகள் நடத்துபவர்களுக்கு இது குறைந்த கட்டணம் தான். எனவே ஐஸ் தொழிற்சாலைகளின் லைசென்ஸ் கட்டணத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி இந்த கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றார் .
இதற்கு பதில் அளித்து யூனியன் தலைவர் அழகேசன் பேசுகையில், அகஸ்தீஸ்வரம் யூனியனில் மொத்தம் 30 ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 7 ஐஸ் தொழிற்சாலைகள் மட்டுமே ஊராட்சி ஒன்றியம் மூலம் லைசென்ஸ் பெற்று நடத்தி வருகின்றன. மீதிஉள்ள 23 ஐஸ் தொழிற்சாலைகள் அனுமதி தரவில்லை. இனிமேல் 5 குதிரைதிறன் சக்தி முதல் 75 குதிரைதிறன் சக்தி உள்ள தொழிற்சாலைகளுக்கு ரூ.25 ஆயிரமும், 75 குதிரை திறன் சக்திக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளுக்கு ரூ.50 ஆயிரமும் லைசென்ஸ் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் லைசென்ஸ் இல்லாமல் இயங்கும் தொழிற்சாலைகள் சீல் வைக்கப்படும் என்றார்.
ராஜேஷ் (அ.தி.மு.க.):- எங்கள் பகுதியில் பணிகளை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.
அதிகாரிகள்:-பணிகளைஆய்வுசெய்ய வரும் போதெல்லாம் கவுன்சிலருக்கும், பஞ்சாயத்து தலைவருக்கும் தகவல் சொல்ல வேண்டியது அவசியம் இல்லை. புதிய திட்டப்பணிகளை தேர்வு செய்யும் போதும், பணிகளை தொடங்கும் போதும் தான் அந்தந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.