நீலகிரியில் 175 நாட்களுக்கு பிறகு பூங்காக்களை திறந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி - பார்வையிட ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி
நீலகிரி மாவட்டத்தில் 175 நாட்களுக்கு பிறகு பூங்காக்களை திறந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே பூங்காவில் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி,
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 17-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் வரவில்லை. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளித்தது. தொடர்ந்து 6 மாதங்களாக மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம், தொழில் செய்து வந்த பலர் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அரசின் தலைமை செயலாளர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளுடன் பொது பூங்காக்கள் அதாவது தோட்டக்கலை பூங்காக்களை மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் 175 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பூங்காக்கள் திறக்கப்பட்டன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா காலை 7 மணி முதல் திறந்து விடப்பட்டது. பூங்காவுக்கு செல்வோர் டிக்கெட் பெறும் இடத்தில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தரையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தது. தங்களது கைகளை சுத்தப்படுத்தி கொள்ள தானியங்கி கிருமிநாசினி வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டு இருந்தது. அதில் கைகளை சுத்தப்படுத்தி கொண்டு உள்ளே நுழையும் சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
முதல் நாள் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. அவர்கள் இயற்கை அழகுடன் கூடிய பச்சை பசேலென காட்சி அளித்த புல் வெளி மைதானத்தில் உலா வந்ததுடன் செல்பி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். நடைபாதையில் நடந்து சென்ற படி பூங்காவை பார்வையிட்டனர். பூங்காக்கள் திறக்கப்பட்டதால் ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களை கவரும் வகையில் மலர் மாடத்தில் 7, 000 பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:- சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வரும்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவர்கள் டிக்கெட் பெறும் நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் மட்டுமே பூங்காவை கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுவர். நேரம் தாண்டினால் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு நேரத்தில் பூங்காவுக்குள் 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் பார்த்துவிட்டு வெளியே வந்த பின்னர் மற்றவர்கள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர முதலில் விண்ணப்பிக்கும் 50 பேருக்கு மட்டுமே நாள் ஒன்றுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தாவரவியல் பூங்காவில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முககவசம் அணியவும் ஆங்காங்கே தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க பணியாளர்கள் வழிகளில் நிறுத்தப்பட்டு உள்ளனர். சுற்றுலா பயணிகள் ஒரு வழியாக சென்று வர வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. பூங்காவுக்கு நேற்று சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்தனர். காலை முதல் மாலை வரை 104 சுற்றுலா பயணிகள் மட்டுமே பூங்காவுக்கு வந்திருந்தனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, ஊரடங்கு உத்தரவால் வீடுகளிலேயே முடங்கி இருந்தோம். உறவினர்கள் வீட்டுக்கு கூட செல்ல முடியவில்லை. தற்போது ஊட்டியில் பூங்காக்கள் திறக்கப்பட்டு உள்ளதால் பொழுதுபோக்குக்காகவும், சுற்றி பார்க்கவும் ஊட்டிக்கு வந்து உள்ளோம். பூங்காவில் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இது போதாது. கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டும் என்றனர்.
உள்ளூர் மக்கள் பூங்காக்களுக்கு வர ஆர்வம் காட்டவில்லை. 6 மாதங்களுக்கு பின்னர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, காட்டேரி பூங்கா திறக்கப்பட்டு உள்ளதால், அதனருகே கடை வைத்து உள்ள வியாபாரிகள் நேற்று கடைகளை திறந்தனர். ஆனால், சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாததால் வியாபாரம் எதிர்பாக்கும் அளவில் இல்லை என்று கவலை அடைந்தனர்.