ஊரடங்குக்கு பிறகு மகுடம் சூட்டிய ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் - படகு சவாரி இல்லாததால் ஏமாற்றம்

கொரோனா ஊரடங்குக்கு பிறகு கொடைக் கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். படகு சவாரி இல்லாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2020-09-10 12:45 GMT
கொடைக்கானல்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்கள் மூடப்பட்டு வெறிச்சோடின. இந்தநிலையில் நேற்று முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கொடைக்கானலுக்கு வருகை தருகிற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்றும், வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

கொடைக்கானலில் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை ரசிக்க முடியாமல் தவித்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் முதல் நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை நேற்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டன. இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு, தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காட்சியளிக்கும் பிரையண்ட் பூங்காவில் பல வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குவது வாடிக்கை. ஆனால் தற்போது பெரும்பாலான செடிகள் பூக்கள் இன்றி காணப்பட்டன. நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் பிரையண்ட் பூங்காவை கண்டுகளித்தனர்.

அங்கு பூத்துக்குலுங்கும் பைன்செட்டியா, சால்வியா, பேன்சி ரக பூக்களை அவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் சிலர், பூங்காவில் நின்று செல்பி எடுத்தனர். ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா போன்றவற்றை கண்டுகளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு பூக்கள் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

கொடைக்கானல் என்றவுடன், சுற்றுலா பயணிகளின் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பது அங்கு நடைபெறும் படகு சவாரி தான். நகரின் மையப்பகுதியில் நட்சத்திர வடிவில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொடைக்கானலை பொறுத்தவரை இயற்கை எழில்கொஞ்சும் 30 சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் நகர்ப்பகுதியில் பார்க்கக்கூடிய இடங்கள் 16-ம், வனப்பகுதியில் 14 இடங்களும் அடங்கும். தற்போது நகர்ப்பகுதியில் உள்ள 3 பூங்காக்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பர்லேக் வியூ, வெள்ளி நீர்வீழ்ச்சி, நட்சத்திர ஏரி ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்.

அதேநேரத்தில் சிட்டி வியூ, அருங்காட்சியகம், பேத்துப்பாறை பகுதியில் உள்ள அஞ்சுவீடு அருவி, ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த கற்குகை, ‘யானை வேலி‘ என்று அழைக்கப்படும் யானைகள் நடமாடும் இடம், பியர்சோழா, பாம்பார் அருவிகள் உள்ளிட்ட நகர்ப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட அனுமதி அளிக்கப்படவில்லை.

இதேபோல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பேரிஜம் ஏரி, பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, தொப்பி தூக்குபாறை, மன்னவனூர் ஏரி உள்ளிட்ட 16 சுற்றுலா இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனிடையே கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதில், நனைந்தபடி சுற்றுலா இடங்களை அவர்கள் கண்டு ரசித்தனர். மேலும் இதயத்தை வருடும் இதமான தென்றல் காற்று தாலாட்டியது. மலை முகடுகளை முத்தமிட்ட மகிழ்ச்சியில், தரையிறங்கிய மேகக்கூட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

அதேநேரத்தில் நேற்று காலை 11 மணி முதல் 12 மணி வரை பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா, கலையரங்கம் போன்ற பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

இருப்பினும் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்காத காரணத்தால், தங்கும் விடுதி அறைகளிலேயே சுற்றுலா பயணிகள் முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில், ஊரடங்குக்கு பிறகு ‘மலைகளின் இளவரசி‘க்கு மகுடம் சூட்டியதாக கொடைக்கானல் நகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எனவே நகர் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பிரையண்ட் பூங்காவுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

டாக்டர் ஐஸ்வர்யா (சென்னை):- ஊரடங்குக்கு பிறகு பிரையண்ட் பூங்கா திறக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது. முதன்முறையாக குழந்தையை வெளியே அழைத்து வந்துள்ளோம். கொடைக்கானல் நகர் மிகவும் தூய்மையாக உள்ளது. இயற்கையான சூழ்நிலை, மேகமூட்டம் போன்றவை ரசிக்கும்படியாக உள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பூங்காவை பார்வையிட்டால் நலமாக இருக்கும்.

ஐ.டி. நிறுவன ஊழியர் தினேஷ் (சென்னை):- கொடைக் கானலுக்கு சுற்றுலா வருவதற்கு இ-பாஸ் அனுமதி பெற்று வந்தோம். கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் தங்கி உள்ளோம். இங்கு மிகவும் ரம்மியமான சூழ்நிலை உள்ளது. தற்போது பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். வனப்பகுதியில் உள்ள உள்ள சுற்றுலா இடங்களை திறப்பதுடன், படகு சவாரி, குதிரை சவாரி செய்ய அனுமதிக்கவேண்டும்.

ஷாஜகான் (திருச்சி):- சுற்றுலா வந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேக மூட்டங்கள் தரையிறங்கியுள்ளது. 6 மாதங்கள் கழித்து மூன்று நண்பர்களுடன் சேர்ந்து இ-பாஸ் பெற்று வந்துள்ளோம். திடீரென மழை பெய்ததால் சீதோஷ்ண நிலை மிகவும் நன்றாக உள்ளது. எங்களுடன் இருக்கும் பல்வேறு நண்பர்களையும் கொடைக்கானலுக்கு அழைத்துள்ளோம். அவர்களும் நாளை (இன்று) வர உள்ளார்கள்.

சுற்றுலா பயணிகள் வருகை குறித்து தோட்டக்கலை அலுவலரிடம் கேட்டபோது, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 30 நாட்களுக்குள் பூக்கக்கூடிய பட்டன்டைசி ரக பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பூங்கா வளாகத்தில் புதிதாக புத்தர் சிலையும் அமைக்கப்பட்டு, அதனை சுற்றி அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அங்குள்ள கண்ணாடி மாளிகையில் பால்சம், ஜெரோம், காவியா போன்ற ரக பூக்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. செயற்கை நீர்வீழ்ச்சிகளும் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன. பூங்கா காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படும். பூங்காவிற்கு வருகை தரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கை கழுவ கிருமிநாசினி வழங்கப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்