ஏழாயிரம்பண்ணை பகுதியில் மழை: வேகமாக நிரம்பும் கண்மாய்கள் - விவசாயிகள் மகிழ்ச்சி
ஏழாயிரம் பண்ணை பகுதியில் மழை பெய்து வருவதால் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. ஆதலால் விவசாயிகள் தங்களது சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மழையினால் ஏழாயிரம்பண்ணை விநாயகர் கோவில் ஊருணி, கொசவன் குளம் ஊருணி, தெப்பக்குளம் ஆகியவை நிரம்பியுள்ளன. 4 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குளம் முழுமையாக நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஊருணி நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் என இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். மேலும் குடிநீரும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்கின்றனர்.
அதேபோல ஊத்துபட்டி, இ.ராமநாதபுரம், சாணான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஊருணிகளும் நிறைந்துள்ளன. கங்கரகோட்டை ஊராட்சியில் உள்ள வேணியன்குளம் கண்மாய், கொம்மங்கிபுரம் கண்மாய், வல்லம்பட்டிகண்மாய் ஆகிய பகுதிகளில் ஓரளவு மழைநீர் தேங்கி நிற்கிறது.
செவல்பட்டியில் பாலாறு கண்ட அய்யனார் கண்மாய், இலந்தை குளம் கண்மாய், வீர சமுத்திரம் கண்மாய், பாம்பாலம்மன் கண்மாய், அலமேலு மங்கை புரம் ஊருணியில் சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் 500 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கண்மாய்கள் மற்றும் ஊருணிகள் வேகமாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.