சேலத்தில், பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் மோசடி: போலி பயனாளிகளிடம் இருந்து ரூ.2 கோடியை மீட்க நடவடிக்கை

சேலத்தில் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் மோசடி செய்த போலி பயனாளிகளிடம் இருந்து ரூ.2 கோடியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-10 12:00 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 10 ஆயிரத்து 700 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், வேளாண்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 20 ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் உள்ள வேளாண்மை துறை அலுவலகங்களில் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் மோசடி நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே போலியாக சேர்க்கப்பட்ட விவசாயிகளிடம் இருந்து ரூ.1 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ.2 கோடியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள் என்பதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்