மோகனூரில் பட்டப்பகலில் துணிகரம்: ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.7 லட்சம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மோகனூரில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.7 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-09-10 11:45 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள ராசிபாளையம் ஊராட்சி நேரு நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 50) விவசாயி. இவர் நேற்று மாலை 3.30 மணி அளவில் மோகனூரில் நாமக்கல் ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் இருந்து ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தை ஒரு பையில் போட்டு தனது ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே மின்வாரிய அலுவலகம் எதிரில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்கு சென்ற நேரத்தில் மர்மநபர்கள் பணத்தை திருடிசென்றது சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் தர்மலிங்கம் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றபின் லுங்கி அணிந்த ஒருவர் ஸ்கூட்டர் அருகில் நிற்கிறார். இதையடுத்து ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார்சைக்கிளில் வந்த டிப்டாப் நபர், ஸ்கூட்டர் அருகில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி ஹெல்மெட்டை வைக்கிறார். தொடர்ந்து ஸ்கூட்டர் பெட்டியை திறந்து, அதில் இருந்த பணத்தை திருடி, தனது சட்டைக்குள் திணித்துக் கொண்டு பஸ் நிலையம் நோக்கி நடந்து செல்கிறார். லுங்கி அணிந்த நபர், பணம் திருடிச்சென்ற நபர் நிறுத்திய மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்.

இவ்வாறு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. பட்டப்பகலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள பகுதியில் துணிச்சலாக ஸ்கூட்டரில் இருந்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்