ஓசூரில், வெளிநாட்டு பெண்ணை தாக்கி பணம், செல்போன், பாஸ்போர்ட் பறிப்பு - ஆட்டோ டிரைவர் கைது
ஓசூரில் வெளிநாட்டு பெண்ணை தாக்கி பணம், செல்போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை பறித்து சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் ரூத் அலெக்சாண்டர் (வயது 65). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கொடைக்கானலுக்கு விசா மூலம் வந்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு, புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல், சேலம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் வந்தார்.
பின்னர், அங்கிருந்து பெங்களூரு செல்வதற்காக, மாநில எல்லைக்கு எப்படி செல்வது? என்று பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் கேட்டார். அப்போது, பஸ் நிலையத்தில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் அந்த மூதாட்டியை தனது ஆட்டோவில் மாநில எல்லைக்கு அழைத்து செல்வதாக கூறி ஏற்றிக்கொண்டார். மேலும் அந்த ஆட்டோ டிரைவர், மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்தம் அக்ரஹாரம் என்ற பகுதிக்கு சென்றபோது, திடீரென ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை தாக்கி அவரிடமிருந்த ரூ.3 ஆயிரம், ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை பறித்துக்கொண்டு கீழே இறக்கி விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, நள்ளிரவில் செய்வதறியாது திகைத்தார்.
பின்னர், அப்பகுதி பொதுமக்கள் சிலர் அவரை மீட்டு, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார், ஆஸ்திரேலிய மூதாட்டியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரிடமிருந்து பணம், செல்போன் மற்றும் பாஸ்போர்ட்டை பறித்து சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிநாட்டை சேர்ந்த பெண்ணை தாக்கி பணம், செல்போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை பறித்து சென்றது ஓசூர் மூக்காண்டப்பள்ளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் என்கிற முள்ளு சங்கர் (50) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே வழிபறி, கடத்தல், கொலை வழக்கு இருப்பதும், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.