தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பு எதிரொலி: தமிழக-கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதின் எதிரொலியாக தமிழக, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீரென்று ஆய்வு செய்தனர்.

Update: 2020-09-10 11:30 GMT
ஓசூர்,

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையை பயன்படுத்தி, அம்மாநில தனியார் தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை திறந்து விட்டன. இதனால் ஆற்று நீர் மாசு கலந்தும், நிறம் மாறியும், நுரை பொங்கியவாறு வந்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையறிந்த மத்திய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்து, தென்பெண்ணை ஆற்றுநீர் மாசடைவதற்கான காரணம் என்ன? மற்றும் இந்த நீரால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என்பதை வெளிப்படுத்தும் நோக்கில், களப்பணியை மேற்கொள்ளுமாறு தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு, உத்தரவிட்டது.

அதன்பேரில், நேற்று தமிழக, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தென்பெண்ணை ஆற்று பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது, கொடியாளம் சிற்றணை, ஓசூர் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் பாய்ந்தோடிய தென்பெண்ணை ஆற்று நீரை, ஆய்வுக்காக குழுவினர் சேகரித்தனர். பின்னர், அந்த நீரை ஆய்வு செய்து, ஆய்வின் முடிவுகளை மத்திய பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வில், டெல்லியை சேர்ந்த மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர் மற்றும் மண்டல அதிகாரி செல்வி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் 4 பேர், ஓசூர் உதவி கலெக்டர் குணசேகரன், ஓசூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்