மோட்டார் சைக்கிளில் இருந்து கட்டிட தொழிலாளி தவறிவிழுந்து பலி - விபத்து நடந்தது தெரியாமல் வாகனத்தை ஓட்டிச்சென்ற நண்பர்
ஆத்தூரில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற கட்டிட தொழிலாளி தவறிவிழுந்ததில், பின்னால் வந்த வாகனம் மோதி இறந்தார். அவர் இறந்தது தெரியாமல் மோட்டார் சைக்கிளை நண்பர் ஓட்டிச்சென்ற பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
ஆத்தூர்,
தர்மபுரி மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவரது மகன் பெரியசாமி (23). நண்பர்களான இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். தலைவாசல் அருகே கூட்ரோட்டில் அரசு கால்நடை ஆராய்ச்சி பூங்கா கட்டும் பணியில் அவர்கள் இருவரும் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சொந்த ஊர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அவர்கள் இருவரும் ஆத்தூர் வழியாக நேற்று முன்தினம் இரவு சென்றனர். ஆத்தூர் புறவழிச்சாலை அப்பம்ம சமுத்திரம் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த பெருமாள் எதிர்பாராத விதமாக ரோட்டில் தவறி விழுந்தார்.
அப்போது பின்புறம் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பெருமாள் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நண்பர் கீழே விழுந்தது தெரியாமல் மோட்டார் சைக்கிளை பெரியசாமி ஓட்டிச்சென்றார். சிறிது தூரம் சென்றபிறகு தான் அவர் நண்பரை காணவில்லை என்று வண்டியில் திரும்பி வந்தார். அப்போது சம்பவ இடத்தில் பெரியசாமி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து மோதிய வாகனத்தை தேடி வருகிறார். விபத்தில் இறந்த பெருமாளுக்கு தேவிகா என்ற மனைவி உள்ளார்.