தரமான உணவுடன் பொழுதுபோக்கு அம்சங்கள்: கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து குணமடைந்தவர்கள் வீட்டுக்கு செல்ல மறுப்பு - தஞ்சையில் ருசிகரம்

தஞ்சை குடிசை மாற்று வாரிய சிகிச்சை மையத்தில் பிரியாணி, முட்டை போன்ற தரமான உணவு வசதியுடன், செஸ், கேரம் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இருப்பதால் குணமடைந்தவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல மறுக்கும் ருசிகர நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

Update: 2020-09-10 11:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி ஒரு நாளைக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, கொரோனா உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனை, குடிசை மாற்று வாரிய கட்டிடம், கும்பகோணத்தில் அரசு மருத்துவமனை, சிறப்பு மையம் ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அரசு மருத்துவமனை, சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீடுகளில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மட்டும் 130 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இங்கு மொத்தம் 3 பிளாக்குகள் உள்ளன. 315-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரு பிளாக்கில் டாக்டர்கள், செவிலியர்கள், அதிகாரிகள் தங்கி உள்ளனர். மற்ற பிரிவுகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1 வீட்டில் 2 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணமடைந்தாலும் வீடு திரும்ப மறுக்கும் ருசிகர நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. காரணம் இங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் தான். குடிக்கவும், குளிக்கவும் வெந்நீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கேரம், செஸ் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ளது. நோயாளிகளுக்கு தரமான உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை இட்லி, பொங்கல், சட்னி, சாம்பார், வடை, தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகிறது. மதியம் சிக்கன் பிரியாணி, 2 முட்டை, தயிர் சாதம், ஊறுகாய், தண்ணீர் பாட்டிலும், இரவு இட்லி, இடியாப்பம், சாம்பார், சட்னி, பாயா, தண்ணீர் பாட்டில், 2 வாழைப்பழங்களும் வழங்கப்படுகிறது.

இதர நாட்களில் காலையில் இட்லி, ஊத்தப்பம், ரவா கிச்சடி, கோதுமை உப்புமா, வடை, சட்டினி, சாம்பார் வழங்கப்படுகிறது. மதியம் அரிசி சாதம், சாம்பார், மோர், உருளைக்கிழங்கு பொறியல், முட்டை, வத்தக்குழம்பு, கோழிக்குழம்பு, வெஜ் பிரியாணி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இரவில் இட்லி, சப்பாத்தி, ஊத்தப்பம், ரவா கிச்சடி, கோதுமை உப்புமா, சாம்பார், சட்னி வழங்கப்படுகிறது.

தினமும் இரவில் 2 வாழைப்பழம் வழங்கப்படுகிறது. தினமும் காலை 11 மணிக்கு பிஸ்கட், டீ வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு சுண்டல், டீ வழங்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா சிகிச்சை மையத்தில் 280 பேர் வரை தங்கி இருந்தனர். ஆனால் 350-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வருவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கி அவர்களை வீட்டிற்கு அனுப்பியும், அவர்கள் வீட்டுக்கு செல்ல மறுத்து அங்கு தங்கி இருந்தது தெரிய வந்தது. தரமான உணவு, தங்குமிடவசதியுடன், பொழுது போக்கு அம்சங்களும் இருந்ததால் குணமடைந்தவர்கள் வீட்டிற்கு செல்ல மறுத்து, அங்கேயே தங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களிடம் நிலைமையை எடுத்துக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது தன்னார்வலர்களைக்கொண்டு நோயாளிகள் தங்கி இருக்கும் அறைகளுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். குணமடைந்தவர்கள், வீடு திரும்புகிறார்களா? என்பதையும் அதிகாரிகள் அடிக்கடி கண்காணித்து உறுதிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்