மன்னார்குடியில், பஸ் மீது லாரி மோதியது - பயணிகள் காயமின்றி தப்பினர்
மன்னார்குடியில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.;
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை மன்னார்குடி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் ஓட்டி சென்றார். மன்னார்குடி 3-ம் தெருவில் பஸ் சென்று கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டியில் சரக்கு இறக்கி விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி மற்றும் லாரியின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் சிதறி விழுந்தன. இதைப்போல லாரியின் முன்பக்க கண்ணாடிகளும் உடைந்து சிதறின.
விபத்தில் பஸ்சும் லாரியும் பலத்த சேதமடைந்த போதும் பஸ் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். மேலும் லாரி, பஸ் டிரைவர்களுக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மன்னார்குடி பணிமனையில் இருந்து மாற்று பஸ் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு பயணிகள் திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சம்பவ இடத்தில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் மீது லாரி மோதியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.