பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எரித்துக்கொலை கொடூர தாய்-பாட்டி கைது

சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தீ வைத்து எரித்துக் கொலை செய்த கொடூர தாய், பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-09 23:28 GMT
சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்த தியேட்டர் கடந்த சில மாதங்களாக பூட்டி கிடக்கிறது. இந்த தியேட்டர் வளாகத்தில் காலி இடத்தில் நேற்று அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள், அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் தீயில் கருகிய நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மோப்ப நாய் டைகர்

உடனே, போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கருகிய நிலையில் குழந்தை உடலும், பாதி எரிந்த நிலையில் துணிப்பையும் கிடந்தன. சில துணிகளும் சிதறி கிடந்தன.

குழந்தை எரித்துக் கொல்லப்பட்ட இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் டைகர் வரவழைக்கப்பட்டது. அது, உடல் கருகிய நிலையில் குழந்தை கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, அருகில் உள்ள சங்கரன்கோவில் சங்குபுரம் 6-வது தெருவில் இருக்கும் சண்முகவேலின் வீட்டின் முன்பு ஓடி நின்றது.

இதையடுத்து சண்முகவேலின் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வாலிபருடன் பழகியதில் கர்ப்பம்

சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்திராணி. இவர்களுடைய மகள் சங்கரகோமதி (வயது 22). இவர் அங்குள்ள கடையில் வேலை செய்தார்.

அப்போது அவருக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சங்கரகோமதி கர்ப்பமானார்.

திருமணத்துக்கு முன்னரே சங்கரகோமதி கர்ப்பமானதால், அவமானம் அடைந்த சண்முகவேலின் குடும்பத்தினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது வீட்டை காலி செய்து விட்டு, சங்கரன்கோவில் சங்குபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொலை

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சங்கரகோமதிக்கு வீட்டிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு முன்னரே குழந்தை பிறந்ததால் அவமானமாக கருதிய குடும்பத்தினர், வீட்டில் இருந்தும் வெளியே செல்லவில்லை. மேலும் மனதை கல்லாக்கி கொண்டு, பச்சிளம் குழந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்கு குழந்தையின் தாய் சங்கரகோமதியும் உடந்தையாக இருந்தார்.

அதன்படி நேற்று அதிகாலையில் சங்கரகோமதி, அவருடைய தாய் இந்திராணி ஆகிய 2 பேரும் சேர்ந்து குழந்தையை தூக்கிக் கொண்டு, அங்குள்ள தனியார் தியேட்டர் வளாகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு துணிகளுடன் சேர்த்து குழந்தையையும் தரையில் கிடத்தி, அதன் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை தீயில் எரிந்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

சிறையில் அடைப்பு

குழந்தையை கொடூரமாக எரித்துக் கொலை செய்த தாய் சங்கரகோமதி, இந்திராணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இதுதொடர்பாக சங்கரகோமதியின் காதலனையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவிலில் பச்சிளம் குழந்தையை பெற்ற தாயும், பாட்டியும் சேர்ந்து தீ வைத்து எரித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்