தென்காசியில் கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 100 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார்.

Update: 2020-09-09 23:25 GMT
தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காமராஜ் காலனியைச் சேர்ந்தவர் கல்யாணி. இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 100). இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே கல்யாணி தன்னுடைய சகோதரர் சொர்ணத்தின் மகன் சங்கர்குமாரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணி இறந்து விட்டார். எனவே இசக்கியம்மாளை வளர்ப்பு மகன் சங்கர்குமார் பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் இசக்கியம்மாளுக்கு கடந்த 1-ந்தேதி திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இசக்கியம்மாளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. ஆனாலும் அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குணம் அடைந்தார்

தொடர்ந்து இசக்கியம்மாளை அங்கு கொரோனா வார்டில் அனுமதித்து 6 நாட்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றினர். நேற்று இசக்கியம்மாளுக்கு சி.டி.ஸ்கேன் செய்தபோது, கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர், கொரோனாவை வென்ற மூதாட்டி இசக்கியம்மாளை வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தென்காசி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் கூறுகையில், ‘இங்கு கொரோனா நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 100 வயது மூதாட்டி பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். எனவே பொதுமக்கள் லேசான அறிகுறி தென்பட்டாலும், உடனடியாக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்