கூடலூர் அருகே, அரசு பள்ளிக்கூடத்தில் ஆயுதங்கள் பதுக்கிய வாலிபர் கைது

கூடலூர் அருகே அரசு பள்ளிக்கூடத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைத்த வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-09-09 15:45 GMT
கூடலூர்,

கூடலூர் தாலுகா புளியம்பாரா அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வகுப்பறையில் கத்திகள், லேப்டாப், செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் பள்ளி வளாகத்தில் மறைந்திருந்த வாலிபர் ஒருவரை பள்ளிக்கூட அலுவலக ஊழியர் பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தேவாலா போலீசில் பள்ளி நிர்வாகம் புகார் செய்தது. இதையொட்டி தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தப்பி ஓடிய வாலிபர் மன்னார்குடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையொட்டி தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து வந்தனர்.

விசாரணையில் அவர், புளியம்பாரா கத்தரிதோடு பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 27) என்பதும் புளியம்பாரா அரசு பள்ளிக்கூடத்தில் ஆயுதங்கள், மோட்டார் சைக்கிள், லேப்டாப் உள்பட பல்வேறு பொருட்களை திருடி அரசு பள்ளியில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் பந்தலூர் உள்பட பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், தேவாலாவில் இருந்து அட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கம்ப்யூட்டர், லேப்டாப் திருட்டு மற்றும் இந்திரா நகரில் 2 மோட்டார் சைக்கிள்கள், பந்தலூர் பஜாரில் உள்ள மளிகை கடையில் ரூ 60 ஆயிரம் கொள்ளையடித்த வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்