மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் உயிருக்கு போராடும் காட்டு யானை - பழங்களில் மருந்து வைத்து சிகிச்சை

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் உயிருக்கு போராடும் காட்டு யானைக்கு பழங்களில் மருந்து வைத்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Update: 2020-09-09 16:45 GMT
மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காலில் காயத்துடன் ஒரு ஆண் யானை அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அத்துடன் அந்த யானை நடக்க முடியாமல் நின்றது.

இது குறித்து தகவல் அறிந்த கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின்பேரில், மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் மேற்பார்வையில் வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்தனர். அப்போது அந்த யானை மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை வனப்பகுதியில் நிற்பது தெரியவந்தது.

இதையடுத்து கோவை கோட்ட உதவி வனப்பாதுகாவலர் தினேஷ்குமார், மேட்டுப்பாளையம் வனச்சரக அதிகாரி செல்வராஜ், தேக்கம்பட்டி அரசு கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த யானைக்கு கால் மற்றும் உடல் பகுதியில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன.

அத்துடன் அந்த யானை நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டு உயிருக்கு போராடுவதும் தெரியவந்தது.

உடனே வனத்துறையினர் பழங்களில் மருந்து மற்றும் மாத்திரைகளை வைத்து அதற்கு சிகிச்சை கொடுத்தனர். உடனே அந்த யானையும் அந்த பழங்களை எடுத்து சாப்பிட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இந்த யானை கடந்த மார்ச் மாதமும் காயத்துடன் சுற்றியது. உடனே அதற்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது மீண்டும் காயத்துடன் சுற்றி வருகிறது. மற்ற யானைகளுடன் நடந்த மோதலில் ஏற்பட்ட காயமா? அல்லது மரத்தில் சாயும்போது காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.

தற்போது பழங்களில் மருந்து கலந்து கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே அதன் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் அந்த யானையை பிடித்து சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்