விருதுநகர் அருகே கல்குவாரியில் சம்மட்டியால் அடித்து வாலிபர் கொலை - காவலாளி கைது

கல்குவாரியில் பணியாற்றிய வாலிபரை சம்மட்டியால் அடித்துக் கொன்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-09 15:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் தனியார் கல்குவாரி உள்ளது. இங்கு கேரள மாநிலம் கொல்லம் பாறசாலை விலக்கு பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது 24) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையூரை சேர்ந்த ஜோதிமாணிக்கம் (25), சென்னல்குடியை சேர்ந்த கருப்பசாமி (57) என்பவரும் வேலை செய்துவந்தனர். கருப்பசாமி குவாரியின் காவலாளி ஆவார்.

வழக்கமாக விஷ்ணு, ஜோதிமாணிக்கம், கருப்பசாமி ஆகிய மூன்று பேரும் வேலை முடிந்த பின்னர் பேசிக்கொண்டு இருப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை இவர்கள் மூன்று பேரும் பேசிக்கொண்டு இருந்த போது கருப்பசாமிக்கும், விஷ்ணுவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

விஷ்ணு, கருப்பசாமியை அவதூறாக பேசியதாகவும், அதை தொடர்ந்து ஜோதிமாணிக்கம் அவர்களை சமரசப்படுத்திவிட்டு வெளியே சென்றுவிட்டதாகவும் தெரியவருகிறது. விஷ்ணு அங்கிருந்த கட்டிலில் படுத்து தூங்கினார்.

இந்தநிலையில் விஷ்ணு மீது கடும் கோபத்தில் இருந்த கருப்பசாமி சம்மட்டியால் விஷ்ணுவின் தலை, வயிறு ஆகிய பகுதிகளில் ஓங்கி அடித்ததில் விஷ்ணு ரத்தவெள்ளத்தில் கட்டிலிலேயே கிடந்தார்.

இந்த நிலையில் வெளியே சென்று விட்டு திரும்பிய ஜோதிமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் சேது ஆகியோர் விஷ்ணுவின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜோதிமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குவாரி காவலாளி கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்