தாங்களே நிதி திரட்டி சீரமைத்தனர்: தஞ்சையில், மயானத்தில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் பொதுமக்கள்

தஞ்சையில், பொதுமக்கள் தாங்களே நிதி திரட்டி மயானத்தை சீரமைத்ததுடன் அங்கு கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.

Update: 2020-09-09 14:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ராஜாகோரி, மாரிகுளம் மற்றும் சாந்திவனம் சுடுகாடு உள்ளிட்டவை உள்ளன.

இதில் மாரிகுளம் சுடுகாட்டை தஞ்சை மாநகராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் புதுப்பட்டினம், விளார், நாஞ்சிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாட்டில் மிகப்பெரிய குளமும் உள்ளது. இந்த குளத்தை சீரமைத்து படித்துறையும் கட்டப்பட்டது.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுடுகாடு முன்பு புதர்கள் மண்டி, கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டது. மேலும் இந்த சுடுகாடு ரவுடிகளின் புகலிடமாகவும் விளங்கி வந்தது. இங்கு ரவுடிகள் ஆயுதங்களை பதுக்கி வைப்பது, வெளியிடங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்தும் விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்கள் நடைபெற்று வந்தன. கஞ்சா விற்பனையும் நடந்து வந்தது.

இந்த சுடுகாட்டின் சுற்றுச்சுவரும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுடுகாட்டை சீரமைப்பது என முடிவு செய்தனர். இதற்காக மாரிகுளம் சுடுகாடு சீரமைப்புக்குழுவையும் ஏற்படுத்தி நிதியும் திரட்டினர்.

அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகளை தொடங்கினர். முதல் கட்டமாக முட்புதர்களை அகற்றுவது, சீமைக்கருவேல மரங்களை பொக்லின் எந்திரங்கள் மூலம் அகற்றுவது என பணிகளை தொடங்கினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்த சமாதிகளை சீரமைத்து வர்ணம் பூசினர். ஈமச்சடங்கு நடத்துபவர்கள், குளிப்பதற்காக அங்கு தொட்டியும் கட்டப்பட்டது. கழிவறைகளும் சீரமைக்கப்பட்டன. குளத்தில் இருந்த செடி, கொடிகளும் அப்புறப்படுத்தப்பட்டது. புதிதாக சுடுகாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இருக்கைகளும் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது

சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, முகப்பு பகுதியில் இரும்பு கேட்டும் அமைக்கப்பட்டது. இவ்வாறு 15 கட்டமாக மாரிகுளம் சுடுகாட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக சுடுகாட்டில் சமூக விரோத சம்பவம் நடைபெறுவதை தடுக்கவும், சுடுகாட்டை சேதப்படுத்துவதை தடுக்கவும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக சுடுகாட்டிற்குள் நுழையும் இடத்தில் சாலையில் 2 கண்காணிப்பு கேமராக்களும், சுடுகாட்டிற்குள் 6 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்க்கும் வகையில் அங்குள்ள கோவிலில் சி.சி.டி.வியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் தொடங்கி வைத்தார். தற்போது மாரிக்குளம் சுடுகாடு முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து மாரிக்குளம் சுடுகாடு சீரமைப்பு குழுவினர் கூறுகையில், “மாரிக்குளம் சுடுகாட்டில் இதுவரை 15 கட்டங்களாக பணிகளை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்களே நிதி திரட்டி இதனை சீரமைத்துள்ளனர். இதுவரை ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். கண்காணிப்பு கேமரா, கேட் போன்றவற்றை சிலர் அன்பளிப்பாக வழங்கி உள்ளனர். மாரிக்குளம் சுடுகாட்டை சுத்தப்படுத்த ஒரு ஆளை நாங்களே நியமித்துள்ளோம். இதனை அடிக்கடி சுத்தப்படுத்த மாநகராட்சி சார்பில் ஊழியர் ஒருவரை நியமிக்க வேண்டும்”என்றனர்.

மேலும் செய்திகள்