திருவாரூர் அருகே கோவில் கதவை உடைத்து ஐம்பொன் சிலை உள்பட 2 சிலைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவாரூர் அருகே கோவில் கதவை உடைத்து ஐம்பொன் சிலை உள்பட 2 சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-09-09 13:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே சாத்தங்குடி கிராமத்தில் பழமைவாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின் பூசாரி கோவில் கதவை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கோவிலின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்றனர். அப்போது மூலவர்் சன்னதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் மூலவர் சன்னதியின் பக்கவாட்டில் உள்ள கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கோவிலில் இருந்த ஒரு அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை மற்றும் ஒரு அடி உயரம் உள்ள மற்றொரு வெண்கல சிலை ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

இதனைத்தொடர்ந்து கோவிலுக்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கோவிலில் இருந்து கோவிலில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கொள்ளை நடந்த கோவிலுக்கு சென்று பூசாரி மற்றும் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார்.

கொள்ளை நடந்த கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த கோவிலில் ஏற்கனவே உண்டியல் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.

கோவில் கதவை உடைத்து மர்ம நபர்கள் சிலைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்