ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;

Update: 2020-09-09 12:08 GMT
தென்காசி, 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. தென்காசி மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்திற்கும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இதனால் மக்கள் பஸ், ரெயில்களில் வெளியூர்களுக்கு சென்று வர தொடங்கி உள்ளனர்.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் நன்றாக இருக்கும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வார்கள். இந்த ஆண்டு சீசன் ஜூன் மாதம் தொடங்கியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது தண்ணீர் குறைவாக விழுந்து வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இங்கு ஒன்றிரண்டு சிறிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. சீசன் இல்லாத நேரத்திலும் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவில் குற்றாலம் வந்து செல்வார்கள். தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தற்போது கோடை வாசஸ்தலமான ஊட்டியில் தாவரவியல் பூங்காவை காணும் வகையில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க அந்த மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்து உள்ளார். அதேபோல், குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகள அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்களும், அந்த பகுதி வியாபாரிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் குற்றாலத்தில் பருவ மழை பெய்யும். அந்த நேரத்தில் அருவிகளில் தண்ணீர் கொட்டும். சீசன் நேரத்தில் குற்றாலத்திற்கு வரமுடியாத சுற்றுலா பயணிகள் இந்த மாதங்களில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க தென்காசி மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்