காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மூலம் இதுவரை 1½ லட்சம் பேருக்கு பரிசோதனை - கலெக்டர் மலர்விழி தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மூலம் இதுவரை 1½ லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மதிகோன்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான சளி, காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெமினி, வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்குமார், அரசு மருத்துவமனை மகப்பேறுத்துறை தலைவர் மலர்விழி, தாசில்தார் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் மலர்விழி கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் 75 காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் அறிகுறி கண்டறியப்படுபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் ஒருநாளில் காலை, பிற்பகல் என மொத்தம் 100 பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரையில் 3,221 பரிசோதனை முகாம்கள் மூலமாக 1,64,617 பேருக்கு காய்ச்சல் சளி, இருமல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காய்ச்சல் கண்டறியும் முகாமின் மூலமாக மட்டும் இதுவரை 110 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக அந்த பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக மாநில அளவில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மிகவும் குறைவாக உள்ளது. காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
பாலக்கோடு தீர்த்தகிரி நகர் 6-வது வார்டில் பேரூராட்சி சார்பில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செயல் அலுவலர் டார்த்தி தலைமை தாங்கினார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுரு, சுகாதார ஆய்வாளர் பசவராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இதில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், மேற்பார்வையாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.