பரமக்குடியில் பரபரப்பு: முக்குலத்தேவர் புலிப்படை பொதுச்செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு - வாகனங்கள் உடைப்பு; தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு
முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பின் பொதுச்செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசியதுடன், அந்த பகுதியில் நின்றிருந்த வாகனங்களை உடைத்துவிட்டு தப்பிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வருபவர், பாண்டித்துரை (வயது 40). இவருக்கு தவச்செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
பாண்டித்துரை ஏற்கனவே முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தார். பின்பு இவருக்கும், அந்த அமைப்பின் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி விட்டார். தற்போது முக்குலத்தேவர் புலிப்படை என்ற அமைப்பை உருவாக்கி, அதன் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழில் சம்பந்தமாக பாண்டித்துரை மதுரை வந்துவிட்டார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் 4 பேர் வந்து, பாண்டித்துரையின் வீட்டின் முன்பு 3 பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசியுள்ளனர். அந்த 3 பெட்ரோல் குண்டுகளும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் என்னவோ, ஏதோவென்று பதறியபடி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு நின்றிருந்த தண்ணீர் வாகனம், கார், ஆட்டோ ஆகியவற்றை அந்த கும்பல் இரும்பு கம்பிகளால் அடித்து உடைத்தது. பின்னர் 4 பேரும் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து பாண்டித்துரையின் மனைவி தவச்செல்வி மதுரையில் இருந்த பாண்டித்துரைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
உடனே அவர் அங்கிருந்து தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அப்பகுதியினர் பாண்டித்துரை வீட்டின் முன்பு திரண்டனர்.
போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அமுதா உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து பாண்டித்துரை கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் குண்டுகள் வீசிய நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.