பிரம்மதேசம் அருகே சோகம்: கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - போலீஸ் விசாரணை

பிரம்மதேசம் அருகே கைக்குழந்தையுடன் இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2020-09-09 03:45 GMT
பிரம்மதேசம்,

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள முருக்கேரி கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜோதி செட்டியார் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 26). இவர் சிறுவாடி மெயின் ரோட்டில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி யுவராணி(25). திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. தன்ஷிகா என்கிற 6 மாத கைக் குழந்தை இருந்தது.

பிரசவத்துக்கு பின்னர் தாய் வீட்டில் இருந்த யுவராணியை, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் கோபாலகிருஷ்ணன் தனது வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். இந்த நிலையில் யுவராணி தனது தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது கொரோனா காலமாக உள்ளது, எனவே அங்கு செல்வது என்பது பாதுகாப்பாக இருக்காது என்று கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை வழக்கம் போல் கோபாலகிருஷ்ணன் தனது கடையை திறக்க சென்றார். பின்னர் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு சாப்பிடுவதற்காக வந்தார். அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை. அக்கம்பக்கத்தில் கேட்ட போதும் அவர் கைக்குழந்தையுடன் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதையடுத்து அனைவரும் ஒன்று சேர்ந்து பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் வீட்டுக்கு பின்னால் உள்ள கிணற்றின் உள்ளே பார்த்த போது, யுவராணி, தன்ஷிகா ஆகியோர் கிணற்றில் பிணமாக மிதந்தனர். இதன் மூலம் அவர் தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்த பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பேரின் உடலையும் மீட்டனர். மனைவி, மகளின் உடலை பார்த்து கோபாலகிருஷ்ணன் கதறி அழுதார். 2 பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 1½ வருடங்கள் ஆகும் நிலையில், யுவராணி கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து திண்டிவனம் சப்-கலெக்டர் அனு மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்