அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் - தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மனு
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க கோரி கோவை கலெக்டரிடம் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மனு அளித்தனர்.
கோவை,
கொரோனா தொற்று காரணமாக குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் நேற்று ஏராளமானோர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதை கலெக்டர் ராஜாமணி பெற்றுக்கொண்டார். இதில், கோவை மாவட்ட கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் முருகேசன், கிருஷ்ணசாமி, பாலகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் அமைப்பு சாரா உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்து 60 வயது பூர்த்தியடைந்த 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 11 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் கேட்ட 1,500 பேரின் விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்ய வேண்டும்.முழு ஊரடங்கு காலத்தின்போது வழங்கிய ரூ.2 ஆயிரத்தை வாங்காத 13 ஆயிரம் பேருக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கோவை-மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா தினசரி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க நிர்வாகிகள் சுரேஷ், வகாப், சண்முகராஜ், பிரபாகரன் அளித்த மனுவில், கொரோனா காரணமாக அண்ணா மார்க்கெட் தற்காலிகமாக ஜி.சி.டி. கல்லூரி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. மழை காரணமாக அந்த மைதானம் சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அண்ணா மார்க்கெட் கடைகளை திறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாலை விரிவாக்கம் காரணமாக மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் அகற்றப்பட்டு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டது. தற்போது அங்கு பணிகள் நடந்து வருவதால், இந்த கோவிலை அகற்றக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில், நில உடைமை பதிவு மேம்பாட்டுத்திட்டத்தின்படி அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலை ஆதார பகுதிகளில் நட்ட கற்கள் காணாமல் போய் விட்டது.
இதனால் அவை ஆக்கிரமிப் புகளால் அழியும் நிலை உள்ளது. எனவே மீண்டும் அளவீடு செய்து கற்கள் நட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
சாய்பாபா கோவிலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்பாஸ் அலி அளித்த மனுவில், அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத் தின் கீழ் தனியார் பள்ளியில் எனது 2 மகன்களும் படித்து வருகின்றனர்.
அங்கு பாடப்புத்தகம், சிறப்பு வகுப்புகள், கல்வி கட்டண மாக 2 பேருக்கும் சேர்த்து 16 ஆயிரம் கேட்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.