தே.மு.தி.க. நிர்வாகி கொலை: பெண் உள்பட 5 பேர் கைது

தே.மு.தி.க. நிர்வாகி கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-08 05:15 GMT
சிவகாசி,

திருத்தங்கல் அய்யாபிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் சங்கிலிராஜன் (வயது48). திருத்தங்கல் நகர தே.மு.தி.க.செயலாளர். இந்தநிலையில் திருத்தங்கல்-அதிவீரன்பட்டி ரோட்டில் நேற்றுமுன்தினம் காலை வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து ஒரு பெண் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் தாழமணி (32), ராஜா (42), கூழ் என்கிற ராபின் (24), இல்லி என்கிற வினோத்கண்ணன் (22), லதா (42), லட்சம் என்கிற லட்சுமணமூர்த்தி ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

துணை போலீஸ்சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் ரகசியமாக 6 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை திருத்தங்கல்-எஸ்.என்.புரம் ரோட்டில் உள்ள சுடுகாடு பகுதியில் குற்றவாளிகள் 4 பேர் மறைந்து இருப்பதாக இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அவர் அங்கு சென்று 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் லதா என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தவழக்கு தொடர்பாக லட்சம் என்கிற லட்சுமணமூர்த்தி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தே.மு.தி.க. பிரமுகர் கொலை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட சங்கிலிராஜனுக்கு முத்துராமலட்சுமி (45) என்ற மனைவியும், ராஜலட்சுமி (19) என்ற மகளும், உதயச்சந்திரன் (12) என்ற மகனும் உள்ளனர். அவர் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் அரிசி கடை நடத்தி வந்தார்.

இவருக்கும் திருத்தங்கலை சேர்ந்த ராமதிலகம் என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ராமதிலகத்துக்கும், அவரது உறவினரான லதாவுக்கும் சொத்து பிரச்சினைஏற்பட்டுள்ளது. இதில் கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு ராமதிலகத்துக்கு ஆதரவான நடவடிக்கையில் சங்கிலிராஜன் ஈடுபட்டுள்ளார்.

லதா தரப்பினர் பல முறை எச்சரித்தும் அவர் ராமதிலகத்துக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்ததால் லதா தரப்பினர், சங்கிலிராஜனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 4 பேர் கொண்ட கும்பல் மது அருந்த சங்கிலிராஜனை அதிவீரம்பட்டி ரோட்டுக்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் நள்ளிரவு வரை அங்கேயே மது அருந்தி உள்ளனர். ராமதிலகத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். அதற்கு சங்கிலிராஜன் மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்