தி.மு.க. ஆதரவு அலை வீசுகிறது: மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது - வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி

தி.மு.க. ஆதரவு அலை வீசுகிறது எனவே மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று திருக்கோவிலூரில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2020-09-07 22:15 GMT
திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன், திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்கள், ஆட்சி மாற்றத்தை விரும்பு கின்றனர். இதன் பலன் வருகின்ற 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் போது பிரதிபலிக்கும். அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று புதிய சாதனை படைக்க போகின்றது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. அமோக வெற்றிபெறும். அ.தி.மு.க. அரசு, எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான, தைரியமான முடிவெடுக்கமுடியாமல் குழம்பிய நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக கொரோன வைரஸ் தொற்று விவகாரத்தில் அ.தி.மு.க அரசு பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளது. தி.மு.க தலைவர் அ.தி.மு.க. அரசின் அனைத்து தவறுகளையும் அவ்வப்போது சுட்டிக்காட்டி ஆட்சியை வழிநடத்தும் சக்தியாக விளங்கி வருகின்றார்.

தமிழகத்தில் தி.மு.க. வுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்களின் விருப்பப்படி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவதை எந்த தீயசக்தியாலும் தடுக்க முடியாது. மக்களின் மனநிலை கண்ணாடிபோல் தெள்ளத்தெளிவாக தெரிகின்றது. மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை பண பலமோ, அதிகார பலமோ ஒன்றும் செய்யமுடியாது. தி.மு.க.வினர் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மன நிலையில் உள்ள மக்களை ஒன்று திரட்டி அதை வாக்காக மாற்றும் பணியில் ஈடுபட்டால் மட்டுமே ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதற்கான பணியை நிர்வாகிகள் அனைவரும் செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்