பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில், பா.ஜனதா மனு
பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதா சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில், மாவட்ட தலைவர்கள் தர்மலிங்கம் (கிழக்கு), நாகராஜ் (மேற்கு), மாவட்ட பார்வையாளர் ஹரி கோடீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அங்கு அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9½ கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் என்று ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் சிறப்பு, விவசாயி களுக்கு கிடைக்கக்கூடிய நிதி நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுவது தான். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் சுமார் 40 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இதில் இணையதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளை தவறுதலாக கையாண்டு, அரசை ஏமாற்றி சிலர் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு இந்த உதவித்தொகையை பெற்றுத்தருகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீவிரமாக ஆய்வு செய்து, உண்மையான விவசாயிகளுக்கு உதவித் தொகை கிடைத்திடவும், குற்றவாளிகள் இருப்பார்கள் என்றால், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது மாவட்ட விவசாய அணி தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசலு, மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் மஞ்சுநாத் குமார், மண்டல தலைவர்கள் பிரவின்குமார், சிவசங்கர் மற்றும் தொழில் அதிபர்அன்பரசன், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.