முகநூல் மூலம் பழக்கம்: பண்ருட்டி வாலிபரை ஆட்டோவில் கடத்தி சித்ரவதை திருச்சியை சேர்ந்த கும்பல் சிக்கியது

முகநூல் மூலம் பெண்ணை ஆபாசமாக பேசவைத்து பண்ருட்டி வாலிபரை ஆட்டோவில் கடத்தி சித்ரவதை செய்த திருச்சியை சேர்ந்த கும்பல் சிக்கியது.

Update: 2020-09-08 00:00 GMT
கே.கே.நகர்,

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவரது மகன் வினோத்குமார் (வயது 31). இவர், பண்ருட்டியில் பிளக்ஸ் பேனர் அச்சடிக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும், திருச்சி காஜாமலையை சேர்ந்த நசீர் அகமது என்பவரின் மகள் ரகமத்நிஷா (20) என்ற பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது சில ஆசை வார்த்தைகளை முகநூலில் பதிவிட்டு வினோத்குமாரை தனது வலையில் விழச் செய்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2 மாதமாக முகநூலில் எவ்வித பதிவும் செய்யாமல் ரகமத் நிஷா இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு முகநூல் மூலம் மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அப்போது, ‘உங்களை நேரில் சந்திக்க ஆசையாக இருக்கிறது. நேரில் வரமுடியுமா?‘ என்று ரகமத்நிஷா பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்து வினோத்குமாருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து சொகுசு மோட்டார் சைக்கிளில் வினோத்குமார் கடந்த 5-ந் தேதி திருச்சிக்கு வந்தார். பின்னர் அவர் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகே காத்திருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் அங்கு வந்து, வினோத்குமாரை குண்டுகட்டாக தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர்.

பின்னர், திருச்சி சங்கம் ஓட்டல் எதிரே உள்ள வ.உ.சி.தெருவில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று வினோத்குமாரை ஒரு அறையில் அடைத்தனர். பின்னர், அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். ரூ.1 லட்சம் இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையேல் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர், என்னிடம் பணம் ஏதும் இல்லை. ரகமத்நிஷா அழைத்ததால்தான் வந்தேன் என கூறி இருக்கிறார். பின்னர் அக்கும்பல் அவரது ஏ.டி.எம்.கார்டை பிடுங்கி, எவ்வளவு பணம் இருக்கிறது? என சோதித்து பார்த்தனர். அதில் தொகை குறைவாக இருந்துள்ளது. உடனே, அவரது ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு, அய்யப்பன் கோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானாவில் அவரை விட்டுசென்றனர்.

அங்கிருந்து சென்ற வினோத்குமார் அருகில் உள்ள கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். ஆனால், கடத்தல் சம்பவம் கே.கே.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு சென்று புகார் கொடுக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காஜாமலையை சேர்ந்த இளம் பெண்ணான ரகமத்நிஷாவை 7 பேர் கும்பல் முகநூல் மூலம் ஆபாசமாக பேச வைத்து சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ரகமத்நிஷா, கூட்டாளிகள் திருச்சி மதுரைரோடு வள்ளுவர் தெருவை சேர்ந்த முகமது ரபீக் மகன் ஆசீக் என்ற நிவாஷ் (26) மற்றும் திருச்சி பாலக்கரை கீழ படையாச்சி தெருவை சேர்ந்த முகமது பாரூக் மகன் முகமது யாசர்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

முகநூல் மூலம் இளம் பெண்களை வைத்து வேறு யாரிடமாவது அக்கும்பல் பணம் பறித்ததா? என்றும், எதற்காக இந்த செயலில் அக்கும்பல் ஈடுபட்டது? என்றும் கே.கே.நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்