மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 37 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர்,
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மார்க்கெட், பஸ் நிலையம் உள்பட அனைத்து இடங்களுக்கும் முன்புபோல் சென்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்விவரம் வருமாறு:-
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வயது சிறுமி, 5 வயது சிறுவன், 31 வயது பெண், காந்திகிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண், 61 வயது முதியவர், பெரியகுளத்து பாளையத்தை சேர்ந்த 26 வயது ஆண், அரவக்குறிச்சியை சேர்ந்த 56 வயது ஆண், 57 வயது பெண்.
தொழிற்பேட்டையை சேர்ந்த 58 வயது பெண், கே.ஆர்.புரத்தை சேர்ந்த 26 வயது பெண், வைகைநல்லூரை சேர்ந்த 31 வயது பெண், ரெட்டிபாளையத்தை சேர்ந்த 53 வயது ஆண், மண்மங்கலத்தை சேர்ந்த 67 வயது முதியவர், குப்புச்சிபாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபர், பசுபதிபாளையத்தை சேர்ந்த 61 வயது முதியவர், குளித்தலையை சேர்ந்த 60 வயது மூதாட்டி, 70 வயது முதியவர், வெங்கமேட்டை சேர்ந்த 33 வயது பெண், பள்ளப்பட்டியை சேர்ந்த 49 வயது ஆண், வையாபுரிநகரை சேர்ந்த 40 வயது ஆண் உள்பட 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பலருக்கு எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், சுமார் 9 பேருக்கு நோய் தொற்று இருப்பது முடிவில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நோய்தொற்றுக்கு ஆளான அவர்கள் அனைவரும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த தெருவை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அந்த தெருவின் இருபகுதி வழியாக யாரும் சென்று வராமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தெருவைச் சேர்ந்த சிலர் நோய்தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே தெருவைச் சேர்ந்த மேலும் 9 பேருக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்ததெருவில் இருபகுதி அடைக்கப்பட்டிருந்தாலும், ஒரு பகுதியில் பகவதி அம்மன் கோவில் இருப்பதால் அந்த கோவில் வழியாக தடைசெய்யப்பட்ட தெருவைச்சேர்ந்த சிலர் தங்கள் தேவைக்காக வெளியே வந்துசெல்கின்றனர்.
இதனால் அருகில் உள்ள தெருவைச் சேர்ந்தவர்களுக்கும் நோய் தொற்று பரவக்கூடிய அபாயநிலை இருப்பதால், அந்ததெருவைச் சேர்ந்த பொதுமக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர். எனவே தடைசெய்யப்பட்ட தெருவைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து எவரும் வெளியே வரக்கூடாதென அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கவேண்டும்.