விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு - நடவடிக்கை கோரி பா.ஜ.க.வினர் மனு

புதுக்கோட்டையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.

Update: 2020-09-07 22:15 GMT
புதுக்கோட்டை,

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும் இத்திட்டத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராமசேதுபதி தலைமையில் பா.ஜ.க.வினர் மனு கொடுப்பதற்காக நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி தலைவர் பாண்டியராஜன், கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் மனுவை அளித்தார்.

பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கான திட்டத்தில், விவசாயிகள் அல்லாதவர்கள், தகுதியற்றவர்கள் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இத்திட்டத்தில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்“என்றார்.

பிரதமரின் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் 14 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் புதிதாக சேர்ந்து பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தகுதியுடையவர்கள், தகுதியற்றவர்கள் யார்? என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது தகுதியற்றவர்களிடம் இருந்து பணம் திரும்ப பெறப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்