வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டரின் காலில் விழுந்து பெண்கள் கண்ணீர் - தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டரின் காலில் விழுந்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-07 22:45 GMT
தஞ்சாவூர், 

கொரோனா தொற்று பரவல் காரணமாக திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்கள் கொண்டு வரும் கோரிக்கை மனுக்களை போடுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று விவசாயிகள், பெண்கள் என ஏராளமானோர் கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.

அந்தநேரத்தில் ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்க வந்த அமைச்சர், எம்.பி.யை வரவேற்பதற்காக கலெக்டர் கோவிந்தராவ் தனது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது பலர், கோரிக்கை மனுக்களுடன் நிற்பதை பார்த்த கலெக்டர், அவர்களை நோக்கி நடந்து வந்தார். பின்னர் நெற்பயிர்களுடன் நின்ற விவசாயிகள் மற்றும் கோரிக்கை மனுக்களுடன் நின்ற பெண்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் மனுக்களையும் பெற்றார்.

தஞ்சையை அடுத்த நீலகிரி ஊராட்சி கலைஞர் நகரை சேர்ந்த பெண்கள், நீண்டநாட்களாக வீட்டுமனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. மிகவும் ஏழ்மையில் வாழும் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

அப்போது திடீரென பெண்கள் சிலர், கலெக்டரின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உடனே போலீசாரும், அதிகாரிகளும் அந்த பெண்களை தூக்கி விட்டனர். உங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பெண்களுக்கு கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கோரிக்கை மனு அளிக்க வந்த பெண்கள் திடீரென கலெக்டரின் காலில் விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்