சிறப்பாக பணியாற்றிய 9 பேருக்கு நல்லாசிரியர் விருது கலெக்டர் ஷில்பா வழங்கினார்

நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

Update: 2020-09-07 22:37 GMT
நெல்லை,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது செப்டம்பர் மாதம் 5-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரால் வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நல்லாசிரியர் விருது அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நவ்வலடி தட்சணமாறநாடார் சங்க சிவந்திஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜன், வள்ளியூர் எஸ்.ஏ.நோபிள் உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாதுசுந்தர்சிங், துலுக்கர்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நோபின், நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிராம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜேசு, நாஞ்சான்குளம் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோயில்பிச்சை, ரகுமான்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கமலா, திரும்பலபுரம் இந்து யாதவா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் இம்மாகுலேட், முக்கூடல் எஸ்.எஸ்.கே.வி. சாலா ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேசுவரி ஆகிய 9 ஆசிரியர்கள் நல்லாசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

கலெக்டர் வழங்கினார்

அவர்களுக்கு நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு, 9 நல்லாசிரியர்களுக்கும் விருது வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும் அவர்களுக்கு 3 பவுன் வெள்ளி பதக்கம், ரூ.8 ஆயிரம் வெகுமதி மற்றும் பயணப்படி என மொத்தம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் ஷில்பா கூறுகையில், ‘நெல்லை மாவட்டம் கல்வித்துறையில் முன்மாதிரி மாவட்டமாக விளங்கி வருகிறது. சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையொட்டி மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். இருந்தாலும் கொரோனா பரவுவதை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

விழாவில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்