திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சர் விழாவில் பங்கேற்க முறையான அழைப்பு விடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-09-07 22:28 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க நேற்று வருகை தந்தார்.

இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறுதுறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.

இதற்கிடையே கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி ஆகியோர் திடீரென வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 2 பேரும் தனித்தனியாக கையில் கோரிக்கை மனுக்களை வைத்திருந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள் தி.மு.க.வை சேர்ந்த தாங்கள் இருவரும் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் நிலையில், இன்று (அதாவது நேற்று) அரசு நிகழ்ச்சி குறித்து எங்களுக்கு முறையான அழைப்பு வரவில்லை. இருப்பினும் நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி அதனை முதல்-அமைச்சரிடம் கொடுக்க வந்தோம் என தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மனு அளிக்க உள்ளே வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்கள் நாங்கள் கொரோனா பரிசோதனை செய்யவில்லை எனவே உள்ளே வர மாட்டோம் என கூறி தங்களது மனுக்களை அவரிடம் அளித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றனர். இச்சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்