தூத்துக்குடி - சென்னை சிறப்பு ரெயில் இன்று இயக்கம் ரெயிலை இயக்கி சோதனை

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது.;

Update: 2020-09-07 00:27 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ரெயில், பஸ் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. ரெயில் சேவையை பொறுத்தவரை முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இன்று (திங்கட்கிழமை) இயக்கப்படுகிறது.

இதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் படுக்கை வசதி கொண்ட சாதாரண வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் நேற்று மதியம் காத்திருப்போர் பட்டியல் 36 ஆக இருந்தது. அதே நேரத்தில் ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அந்த பெட்டிகளில் முன்பதிவு நிறைவடையாத நிலையில் இருந்தது.

ரெயிலை இயக்கி சோதனை

மேலும் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இதனால் அந்த ரெயில் பெட்டிகள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணியும் துரிதமாக நடந்தன. ரெயிலை தண்டவாளத்தில் இயக்கியும் பரிசோதனை செய்யப்பட்டன. இன்று (திங்கட்கிழமை) ரெயில் 1-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்