சமூக இடைவெளி இல்லாமல் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் போலீசார் எச்சரிக்கை

புதுவை மார்க்கெட், இறைச்சிக் கடைகளில் நேற்று சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதைப்பார்த்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.;

Update: 2020-09-06 21:05 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவது கட்டாயம் என அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதுவையில் உள்ள இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இறைச்சி வாங்கிச் சென்றதை காண முடிந்தது. அப்போது அந்த வழியாக சென்ற போலீசார், சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூடி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஒலிபெருக்கி மூலம் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். புதுவையில் நேற்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.750-க்கும், சிக்கன் ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அபராதம்

புதுச்சேரி உப்பளம் சாலையில் இருந்து மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழி, சிமெண்டு சாலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை பெண்கள் தரையில் கடை விரித்து மீன் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர். பெரியமார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களிலும் பெண்கள் மீன் வியாபாரம் செய்தனர். அங்கும் கொரோனாவை பற்றி கவலைப்படாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் மீன்களை வாங்கிச்சென்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்